நாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான திமுக, அதிமுக தலைவியும் முதல்வருமான ஜெயலலிதாவை அவர் பிறந்த நாளன்று விமர்சித்து வெளியிட்ட செய்தித்தாள் விளம்பரம், இந்த தேர்தலுக்கான சூடான பொதுவெளி மோதலுக்கு முன்னோட்டமாக வந்து விழுந்துள்ளது. “நாடு உயர்ந்திட நல்லாட்சி மலர்ந்திட என்றெல்லாம் வாசகங்களைக் கொடுத்த திமுக இப்படி வீழ்ச்சி அடைந்தது, அக்கட்சியில் ஏற்பட்டிருக்கும் தலைமுறை மாறுதலைக் காட்டுகிறது” என்று ஒருசாரார் புலம்பினர். இன்னொரு சாரார் இதுதான் இளைஞர்களை ஈர்க்கும். சும்மா நச்சென்று இருக்கிறது இந்த விளம்பரம் என்றனர். செய்தித்தாள்காரர்களுக்கு கொண்டாட்டமோ கொண்டாட்டம். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக கட்சி சார்பில் அல்லது தனிநபர் சார்பில் செய்யப்படும் விளம்பரங்கள் தேர்தல் செலவுக் கணக்கில் சேராது என்பதால் இப்போதே இன்னும் கொஞ்ச விளம்பரங்களுக்காக செலவழித்துவிடலாம் என்று கட்சிகள் முடிவு செய்துள்ளன.
ஏற்கெனவே அமெரிக்க தேர்தல் விளம்பரங்கள் பாணியில் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி முழுப்பக்க விளம்பரங்கள் செய்தித்தாள்களில் வெளிவந்தன. இதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி அன்புமணி முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஆனால் இந்த இரண்டு விளம்பரங்களுமே இவர்களின் எதிரணியினரால் சமூக ஊடகங்களில் கிழித்து தொங்கவிடப்பட்டன. வாசகங்கள் மாற்றிப்போடப்பட்டு பதிலடி தரப்பட்டன. அன்புமணி ராமதாஸ் செய்த விளம்பரம் நேர்மறையிலானது. யாரையும் தாக்காத விளம்பரம். திமுக செய்திருப்பது நேரடியாக அதிமுகவை எதிர்மறையாக விமர்சிக்கும் விளம்பரம்.
இந்த போக்கைக் கண்டு பிற கட்சிகளும் தவிர்க்க இயலாமல் விளம்பரங்கள் கொடுக்க முன்வரலாம். இல்லையெனில் அடப்பாவிகளா, சீக்கிரம் தேர்தல் தேதி அறிவிக்கை வெளியிடுங்கள், இவங்க அழும்பு தாங்கல என்று நினைத்துக்கொள்ளலாம். தேர்தல் தேதி அறிக்கை தள்ளிப்போனால் நல்லது என்று செய்தித்தாள் உரிமையாளர்கள் வேண்டிக் கொள்ளக்கூடச் செய்யலாம். ஆதரவு செய்தித்தாள், எதிர்ப்புச் செய்தித்தாள் இல்லாமல் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் விளம்பரங்களைத் தரும் கட்சிகளின் ‘நேர்மை’யைப் பாராட்டலாம்!
“இதே கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும், யாருக்கு எந்த விளம்பரத்தை நிறுத்துவது என்று யோசிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். தேர்தல் காலமென்றால் காலைப் பிடிப்பார்கள். ஆட்சிக்கு வந்த பின்னால் கழுத்தைப் பிடிப்பார்கள்” என்று சொல்கிறார் சமூக ஆர்வலரான நண்பர் ஒருவர்.
இவ்வளவு பணம் செலவழிக்கும் நிலையில் முன்பெல்லாம் கட்சிகள் இல்லை. எனவே கட்சி தலைவர்கள் கிராமந்தோறும் பயணம் செய்தார்கள் வீட்டுத் திண்ணைகளில் படுத்துறங்கினார்கள். விடிய விடிய பிரச்சாரம் செய்தார்கள். பேசிக்கொண்டே போனார்கள். மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, வருவதோ நித்திரை, என்று பேசி விடிகாலையில் காத்திருந்த மக்களை உற்சாகம் கொள்ளவைத்தார்கள். உதயசூரியன் எழுந்துவரும் வரை தேர்தல்கூட்டத்தில் பேசியிருக்கிறார் அண்ணா. கிழக்கு வெளுத்தவுடன் அதைக் காட்டி தேர்தலுக்கு பிரச்சாரமாகக் கொள்ளும் உத்தியும் இருந்தது. எவ்வளவு பிரச்சார உத்திகள்? எத்தனை மேடைகள், தெருக்கூட்டங்கள், துண்டுபிரசுரங்கள், மேடை நாடகங்கள், பாடல்கள், மாட்டுவண்டி முதல் ஆட்டோ ரிக்ஷா எத்தனை தொண்டைகள் அலறும்? ஆனால் இன்றைக்கு பிரச்சா ரத்தின் முகமே மாறிவிட்டது!
மணிக்கணக்கில் பேசும் எந்த பேச்சாளனும் தேவையில்லை. பத்துமணிக்குமேல் ஒலிபெருக்கி ஒலித்தால் வழக்குப் போட்டுவிடும் தேர்தல் ஆணையம். முன்பு தனியார் தொலைக்காட்சி என்ற வஸ்து இல்லை. இப்போது எத்தனையோ செய்தித்தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. மாலை ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் முக்கியத்தலைவர் தேர்தல் கூட்டத்தில் பேசி, அது நேரடி ஒளிபரப்பு செய்யும் அளவுக்கு எல்லாம் ஒழுங்கு செய்யப்பட்டுவிட்டன. இந்த நேரடி ஒளிபரப்புகள் இரண்டுவிதமாகச் செய்யப்படும். ஒன்று, கட்சிக்கு தொ.கா. பணம் கொடுத்துவிட்டு நேரடியாக ஒளிபரப்பும். இரண்டு, கட்சி தொ.கா.வுக்கு பணம் கொடுத்து நேரடி ஒளிபரப்புச் செய்ய வைக்கும். பொதுக்கூட்ட மேடையிலிருந்து தொ.கா. வழியாக வரவேற்பறைகளுக்குள் இந்த அரசியவாதிகள் நுழைய ஆரம்பித்து பத்துஆண்டுகள் ஆகிவிட்டன. முதலில் செய்தித்-தொலைக்-காட்சிகள் கட்சிப் பிரச்சாரக் கூட்டத்தை ஒளிபரப்ப தயங்கின. ஏனெனில் அது ஒரு கட்சிக்கு மட்டும் தருகின்ற தேவையில்லாத நல்வாய்ப்பாக அமைந்தது. சன் தொலைக்காட்சி கோலோச்சிய காலத்தில் திமுக கூட்டங்கள் மட்டும்தான் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. ஜெயா தொலைக்-காட்சியில் அதிமுக கூட்டங்கள். இப்போது மேலும் பல சானல்கள் வந்துவிட்ட நிலையில் கிட்டத்தட்ட எல்லா மாலைகளிலும் வீட்டில் அமர்ந்தே நமக்குப் பிரியமான அரசியல் தலைவர் பேசும் பொதுக்கூட்டத்தைப் பார்க்கலாம். கூட்டம் நடக்கும் இடத்துக்குப் போக வேண்டியது கிடையாது. கொட்டும் பனியில், மழையில், வெக்கையில் கடலையைக் கொறித்துக் கொண்டு பேச்சைக் கேட்கவேண்டாம்!
என்னய்யா பேசுறாரு.. சரியில்லையே என்று ரிமோட்டை மாற்றி எதிர்க்கட்சி, உதிரிக் கட்சி சார்பாக முழங்கும் காமெடி தலைவர்களின்பேச்சைக் கேட்கப் போய்விடலாம்! இதுதான் பிரச்சாரங்களின் நிலைமை!
இது மட்டுமல்லாமல் இரவு பத்துமணிக்கு மேல் அன்றைக்கு நடந்த பிரச்சாரங்களின் சுவாரசியமான துளிகளை, நக்கல் நையாண்டிகளுடன், சினிமா கிளிப்பிங்க்ஸ்களுடன் போட்டு மானத்தை வாங்க எல்லா செய்தித் தொலைக்காட்சிகளும் காத்திருக்கின்றன. பிரச்சார வாகனத்தில் இருந்து எகிறி உதைக்கும் தலைவர், தூவென துப்பும் மூத்த தலைவர், கேள்வி கேட்டால் முகத்தைத் திருப்பும் தலைவர், சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்பவர், வேட்பாளர் பெயரை, தொகுதி பெயரை மாற்றி, எதிரிக்கட்சிக்கு வாக்கு கேட்கும் தலைவர் என்று மேமாதம் வரை எந்த நகைச்சுவைக்கும் பஞ்சமே இருக்காது. ‘நான் பத்துமணிக்கு மேல் செய்திச்சானல்கள் பார்ப்பதை தவறவிடவே மாட்டேன். ஒரு நாளின் டென்ஷன்களில் இருந்து அதுதான் என்னை விடுவிக்கிறது’ என்று தேர்தல் காலங்களில் எல்லோரும் சொல்வார்கள். அது உண்மையும் கூட.
இந்த செய்திச்சானல்கள் ‘கண்டுபிடித்த’ இன்னொரு விஷயம் விவாத மேடை. எங்கிருந்துதான் இந்த சமூக ஆர்வலர்களைப் பிடிக்கிறார்களோ? ஒவ்வொருவரும் ஒரு முகமூடிக்குள் பதுங்கிக்கொண்டு, ஸ்லிப்பர் செல்களாக மாறி பின்னிப் பெடல் எடுப்பார்கள். எல்லா கட்சியும் இப்படி விவாதத்துக்கு சரியான ஆட்களை அனுப்பாவிட்டால் பொதுத்தளத்தில் கெட்ட பெயர் என்று உணர்ந்து அதற்காகவே ஆட்களை ‘நேர்ந்து’ விட்டிருக்கிறார்கள். இவர்கள் ‘எவ்வளவு அடித்தாலும் தாங்கக் கூடிய’ மகா பொறுமைசாலிகள்.! “ஆனால் பாருங்கள், இந்த இடதுசாரிகள்தான் விவாதக் களங்களில் ஆளுமை செய்கிறார்கள். குறைவான எம்.எல்.ஏக்களைக் கொண்ட கட்சிக்கு எவ்வளவு கருத்துச்சொல்லும் ஆட்கள். பல சானல்களில் நிகழ்ச்சியை நடத்துகிற நெறியாளரே இடதுசாரியாக இருக்கிறார்!” என்று என்னிடம் புலம்பினார் ஒரு வலதுசாரி ஆர்வலர். இது இன்னொரு உள்கதை. தேர்தல் பிரச்சார களத்தில் முக்கியப் பங்கு வகிக்கப்போவது இந்த தொ.கா.விவாத மேடைகளும் தான். செலவே இல்லை என்பதால் கட்சிகளும் இதை புறக்கணிக்கப்போவதில்லை. தந்தி தொ.கா.வைப் புறக்கணிப்போம் என்று அறிவித்த திமுக சில நாட்களில் பின்வாங்கியதையும் பார்த்தோம் அல்லவா?
வழக்கமான பிரச்சாரங்களின் எந்தவிதிமுறைகளுக்கும் கட்டுப்படாத ஒரு பிரச்சாரம் சமூக வலைதளங்களில் செய்யப்படும். எவ்வளவுதான் நல்ல முறையில் பிரச்சாரம் செய்தாலும் அதையே திருப்பி அடித்து செய்தவரையே காலி செய்வார்கள். எல்லா கட்சிகளிலும் மீம்ஸ் செய்ய தொழில்முறை ஆட்டக்காரர்கள் இயங்குகிறார்கள். மாவட்ட ரீதியாக தனி இணைய அணிகள் இயங்குகின்றன. இத்துடன் எத்தனை பேக் ஐடிகள்? சமூக ஊடகம் பெரும் விலங்குகள் நிறைந்த காடுபோல் இருக்கிறது என்பதால் அதில் இந்த தேர்தல் பிரச்சாரம் பெரும் வேட்டைக்களமாக அமையப்போகிறது. வேட்டையாடிகள் வேட்டையாடப்-படுவதும், யானைகளை எலிகள் வீழ்த்துவதும் இங்கே சகஜம் என்பதால் சுவாரசியமும் நிச்சயம். எத்தனைபேர் காவல்துறையிடம் புகார்களைத் தரப்போகிறார்கள் என்பது அந்த மார்க்குக்கே வெளிச்சம். சமீபத்திய பலிகடா: ம.ந.கூ ஒருங்கிணைப்பாளர் வைகோ. ஓர் சாலை விபத்தைப் பார்த்து அவர் வருந்திய படம் முதல் நாள் வந்தது! மறுநாளே அவரது வாகனம் மோதி அந்த இரண்டுபேரும் இறந்துவிட்டார்கள் என்று ஒரு விஷமத் தகவல். சமூக ஊடகத்தின் இன்னொரு மோசமான முகம் என்னவெனில் எந்த தகவலும் அழியாது. அது வெவ்வேறு முகங்கள் கொண்டு சுற்றிக்கொண்டே இருக்கும்!
ஆகவே தயார் ஆவோம்! இந்திய ஜனநாயகத்தின் இன்னொரு அரங்க நிகழ்ச்சி ஆரம்பமாகிறது!
பிப்ரவரி, 2016.